Friday, April 27, 2012

தங்கமாய் ஒளிர்விடும் கேஷியா மலர்கள்.

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே!!!!!

மின்வெட்டினால் ஏற்படும்  லாபங்கள்   பலப்பல.
இன்வர்ட்டர் இருந்தாலும்  அது தாங்குவது சில

அழுத்தங்களையே. .அதற்கு தொலைக்காட்சி பிடிக்காது.
பெரிய மின்விசிறி பிடிக்காது. கணினி ...ம்ஹூம் பிடிக்கவே பிடிக்காது.
மாலை 4லிருந்து ஆறுமணி எங்கள்  கோட்டா.
மூன்று மணியிலிருந்தே தனிஆவர்த்தனம் வாசிக்க ஆரம்பித்து  விடும் மின் விளக்குகள்.

எங்களுக்குள் ஒரு   ஒப்பந்தம்  . அவர் காற்றில்லாமல் கிரிக்கெட்ட் பார்ப்பார் .நான்   காற்றோடு  ராவ் பஹதூர் சிங்காரம் படிப்பேன்.:)
அதுவும்  குறைந்த காற்றோடு ஓடும், சாமரம் வீசும் தோழி இந்த விசிறி.

பதிவர்   கீதாவிடம்  பேசிய போது  அலுத்துக் கொள்ளவே இல்லை. காலையில் ஒன்பது மணிக்குப் போய் 12  மனிக்கு வருகிறதாம்.

இரவு  எப்போது வேண்டுமானாலும் போகலாம். ஆனால் நடுராத்திரி இரண்டு மணிக்கு மேல் ஏசி  போட்டுக் கொள்ளமுடியும்.
ஏற்கனவே   ஆஸ்த்மா இருக்கிறதே . அவஸ்தையாக இல்லையா
என்று  கேட்டால். ,திருச்சியில் வேர்ப்பதே கிடையாதாம்.
அதுவும் அடடா  மழடா அட மழைடான்னு நேற்று கொட்டித் தீர்த்ததாம்.

மொட்டை மாடிக்குப் போனால் அகிலாண்டேஸ்வரி, உச்சிப் பிள்ளையார்,  ரங்கநாதன் கோபுர விளக்கெல்லாம் பளிச்சிடுகிறதாம்.
ஜன்னல் வழியாகக் காவிரி தெரிகிறாளாம்..

இப்பவே திருச்சிக்கு டிக்கட் வாங்கிடலாம்னு நினைக்கிறேன்:)

இதோ நம் வீட்டிலும் மின்வெட்டுதான். சொல்லி ஒருதரம் அணைப்பாங்க. சொல்லாமல் ஒரு தரம் அணைப்பாங்க போல.
அணைக்கிறது நாகரீகமான வார்த்தை வெட்டுவதே பொருத்தமானது!!!

அதனால் கிடைத்த மின்சக்தியில் இந்தப் பதிவை எழுதிவிடுகிறேன்.:)
வெளியே மழையும் பெய்யுது  மஞ்ச வெய்யிலும் காயுது என்று இரண்டும் கலந்தடிக்கின்றன.
இதுவும் ஒரு அருமை.

லாபம் இன்னொன்று மின்சாரக்கட்டணத்தைப் பற்றிக் கவலைப் படவேண்டாம். அதுவும் குறைந்துவிடும்.

வீட்டைவிட்டு வெளியே போகும் பழக்கம் வரும்.
படிதாண்டும் பத்தினியாக  பதியோடு    போகலாம்.

எந்த ஏரியாவில் முழு மின்வெட்டு இல்லை என்று தெரிந்து கொண்டு அவர்களோடு  குசலம் விசாரிக்கலாம்.

சாப்பாட்டு நேரத்துக்கு வீட்டுக்கு வந்துவிடலாம்.

இப்போதுதான் ராணி, என் உதவிக்கு வரும் பெண் சொல்லிவிட்டுப் போனார்.
இன்று காலை 9  லிருந்து மாலை ஐந்தரைவரை
நோ பவர்!!!
ஆஹா . கணினியை மூடும் நேரம் வந்துவிட்டது.

அடுத்த நாவல் என்ன படிக்கலாம்:)
தலைப்புக்கும்    எழுதி இருப்பதற்கும் சம்பந்தமே இல்லையே என்று நினைப்பவர்களுக்கு

மின்சாரம் போனால் உடலிலும் சாரம் இறங்கிவிடுகிறது.

அதனால் கொஞ்சம் புலம்பல் கொஞ்சம் பினாத்தல்.:)))






4 comments:

ராமலக்ஷ்மி said...

தங்க மலர்கள் அழகு.

/ஜன்னல் வழியாகக் காவிரி தெரிகிறாளாம்../

ஆஹா:)!

மின்வெட்டு மறந்த போன பல ரசனைகளை மீட்டெடுப்பதை மறுப்பதற்கில்லை:)! நல்ல பகிர்வு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்கமாய் ஒளிர்விடும் கேஷியா மலர்கள் [சொரைக்கொன்னை தானே?] அருமை.

திருச்சிக்கு வாருங்கள்.

வருக வருக வருக !!!

ஆனால் மின்சாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தயவுசெய்து வராதீர்கள்.

தினமும் சுமார் 10 மணி நேரங்கள் இங்கு மின்தடையில் தவித்து வருகிறோம்.

AC + இன்வெட்டெர் போன்ற அனைத்து வசதிகளும் இருந்தும், எப்போதும் கையில் விசிறியை ஆட்டிக்கொண்டு படு அவஸ்தை பட்டு வருகிறோம்.

மின்தடையைப் பொருத்தவரை, தமிழ்நாட்டில் அங்கிங்கனாதபடி எஙுகும் அவஸ்தைதான்.

திருச்சியின் வெயிலும் 105 டிகிரி அடித்து வருகிறது.

ADHI VENKAT said...

மின்வெட்டு பிரச்சனை தில்லியில் பல வருடங்களாக நாங்கள் அனுபவித்துக் கொண்டு வருவது.....

நேற்று ஸ்ரீரங்கத்திலுள்ள என் மாமியார் தொலைபேசியில் பேசும் போதும் சொன்னார். நல்ல இடியுடன் கூடிய மழையாம்....

அவர்கள் மாலையில் மொட்டை மாடிக்கு சென்று விட்டால் ஒரு எட்டு வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் பத்து மணி வரை அங்கு தான். ஆனந்தமான காற்று. நாங்கள் சென்றாலும் அப்படித்தான். தினமுமே கோபுர தரிசனம் தான்.....எங்க ஊர் கோவைக்கு அடுத்தபடியாக எனக்கு பிடித்த ஊர் திருச்சி.

கோவையிலும் ஆலங்கட்டி மழையாம்....

savitha said...

கேஷியா மலர்கள் அழகாக உள்ளது..

"எந்த ஏரியாவில் முழு மின்வெட்டு இல்லை என்று தெரிந்து கொண்டு அவர்களோடு குசலம் விசாரிக்கலாம்."- நிறைவேறுவது மிகவும் கஷ்டம்மா...